பப்ஜி மதன் எத்தனை கோடி சொத்து சேர்த்திருக்கிறான், எத்தனை சொகுசு கார் வைத்திருக்கிறான் என்கிற விவாதம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. நடக்கட்டும். ஆனால், அந்த விவகாரத்தில் அதைவிட மிகப்பெரிய சமூகப்பிரச்சனை ஒன்று இருக்கிறது. அதனைத் தான் நாம் அதிகமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
பப்ஜி மதனுடைய வீடியோக்களில், அவனுடன் பப்ஜி விளையாடிவர்களிலும், அவனுடைய யூட்யூப் சானலுக்கு பார்வையாளர்களாக இருந்த இலட்சக்கணக்கானவர்களிலும் பெரும்பகுதி சிறுவர்களே என்பது தான் கவனிக்கப்பட வேண்டியது. 13 இல் இருந்து 18 வயது வரையிலான சிறுவர்கள் தான் அதிகமாக பப்ஜி மதனால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.
இதனை ஆய்வு செய்வதற்கு முன்னர், என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். குட்டிஸ்டோரி என்கிற யூட்யூப் சானலைத் துவங்கி, இந்த சமூகத்திற்காக உழைத்தவர்கள், சமூகப்பிரச்சனையை எதிர்கொண்டு சாதித்தவர்கள் என பல சாதனையாளர்களின் கதைகளை முதல் 50 வீடியோக்களில் வெளியிட்டோம். அதன்பிறகு, தமிழக சிறுவர் இலக்கிய வரலாற்றிலேயே முதன்முறையாக டச்சு என்கிற மொழியில் இருந்து ஐம்பது கதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை தமிழுக்கு மொழிபெயர்த்து அடுத்த 50 வீடியோக்களில் கதைகளாகச் சொன்னோம். அதன்பிறகு, சிறுவர்களுக்கான சினிமாக்களாக காலம்காலமாக முன்வைக்கப்பட்டு வரும் பெரியவர்களின் சினிமாக்களைத் தாண்டி, உண்மையான சிறுவர் சினிமாக்களை அறிமுகப்படுத்தும் சிறுவர் சினிமா கதைகளை சொல்ல ஆரம்பித்து இதுவரை 4 வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறோம். பலரும் பாராட்டினார்கள். ஆனால் ஓராண்டைக் கடந்தும், இன்னும் 1000 சப்ஸ்க்ரைபர்களைக் கூட எட்ட முடியவில்லை. ஒரு வீடியோவிற்கு சராசரியாக 50 வியூசை தாண்டுவதே தண்ணிபட்ட பாடாகத்தன் இருந்துவந்திருக்கிறது. அதற்கே பேஸ்புக்கிலும், வாட்சப்பிலும், ட்விட்டரிலும் பகிர்ந்து கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஆனாலும், மிகச்சிறிய வட்டத்தைத் தாண்டி பெரியளவுக்கு வெளியே சென்றதாகவும் தெரியவில்லை.
இதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்?
நாங்கள் எங்கே தவறு செய்கிறோம்?
நாங்கள் செய்வதே வீண் வேலையா?
வெறுமனே எங்களுடைய நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறோமா?
என்கிற கேள்விகளெல்லாம் எழாமல் இல்லை. சில நண்பர்களிடம் கேட்டோம். சில சின்னச்சின்ன திருத்தங்களை சொன்னார்கள். அவற்றை அவ்வப்போது சரிசெய்து வந்திருக்கிறோம். ஆனால், அதனாலெல்லாம் பார்வையாளார்கள் பெரிதாக அதிகரிக்கவில்லை.
ஒரேயொரு காரணம் மட்டும் மிகமுக்கியமாக கவனிக்க வேண்டியதாக இருந்தது.
“உங்க வீடியோவை வீட்டில் போட்டால், எங்கள் குழந்தைகள் நிறைய கேள்விகள் கேட்கிறார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்வதற்கும், பதிலைத் தேடுவதற்கும் எங்களுக்கு நேரமில்லை. ஒரு யூட்யூப் வீடியோவைப் போட்டால், குழந்தைகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் பார்த்தால் தானே, எங்களுக்கும் தொந்தரவு இல்லாமல் இருக்கும். Vlad & Niki, Ryan’s toys போன்ற யூட்யூப் சானல்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்க. அதைப் போட்டுவிட்டால், குழந்தைகள் அமைதியாகப் பார்க்கிறார்கள்”
என்று ஒரு காரணத்தை ஒரு நண்பர் சொன்னார். அதே காரணத்தை வெவ்வேறு வார்த்தைகளில் இன்னும் சிலர் கூறினார்.
யூட்யூபை ஒரு “குழந்தைகள் காப்பகம்” போன்று பயன்படுத்துகிறார்களோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. யூட்யூப் என்பது ஒரு தொழிற்நுட்பம் மட்டும் தானே. அந்த தொழிற்நுட்பம் உருவாக்கிக் கொடுத்திருக்கிற மிகப்பெரிய காட்டில் நம் குழந்தைகளை தனியாக இறக்கிவிட்டுவிட்டு வந்துவிடுவது என்ன நியாயம்?
தனித்துவிடப்படுகிற குழந்தைகளெல்லாம் இணைய தொழிற்நுட்பத்தினால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ப்ளூவேல் வந்தாலும் அவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள், போகிமேன் வந்தாலும் அவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள், பப்ஜி வந்தாலும் அவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள், பப்ஜி மதன் வந்தாலும் அவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
அதனால் குழந்தைகள் எந்நேரமும் போனிலேயே நேரத்தைக் கழிக்கிறார்கள் என்றால், நாம் தான் கவனிக்க வேண்டும். குழந்தை அமைதியாக உங்களைத் தொந்தரவு செய்யாமல் ஒரு ஓரமாக உட்கார்ந்து போனையே பார்த்துக்கொண்டிருக்கிறது என்றால், உடனே குழந்தையை திசைதிருப்பி பேச்சுக்கொடுப்பது அவசியம்.
யூட்யூபில் வீடியோ பார்ப்பதாக இருந்தாலும் கூட, அவர்களைத் தனியாக விடாதீர்கள். குட்டிஸ்டோரி சானலே கூட, ஒரு குடும்பத்தில் இருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாக அமர்ந்து, பார்த்து, விவாதிக்க வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டது தான்.
குழந்தைகள் தனித்துவிடப்பட்டால், வழிதெரியாமல் தொழிற்நுட்பங்களின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள். ஏனெனில் தொழிற்நுட்பங்களின் பின்னால் மிகப்பெரிய ஜாம்பவான்களும், குழந்தைகளின் மனதை அறிந்துவைத்திருக்கிற மாபெரும் அறிவுஜீவிகளும், கார்ப்பரேட் நிறுவங்களும் இருக்கின்றன. அவர்களிடம் போய், நம் குழந்தைகளை தனியாக விட்டால், எப்படித் தப்பிப்பார்கள்….
அதனால் மீண்டும் சொல்கிறோம் “யூட்யூப் ஒரு குழந்தைகள் காப்பகம் அல்ல”. கவனம் தேவை…. அப்போது தான் பப்ஜி மதன்களெல்லாம் உருவாகாமல் தடுக்கமுடியும்…